கடலூர் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு சகமாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது. சென்ற செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், 12 தினங்களுக்கு பின் சமூகவலைதளத்தில் வெளியானது. இதனையடுத்து அக்..10ஆம் தேதி இதுகுறித்து அந்த மாணவனுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோன்று மாவட்ட குழந்தைகள் நலக் குழு, 16 வயது மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.
இதற்கிடையில் தன் மகளை குழந்தைகள் நலக்குழுவினர் எதற்காக அழைத்துச் சென்றனர் என்று தெரியவில்லை என்றும் அவளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரியும் மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, மாணவியை சட்டவிரோத காவலில் வைத்து இருப்பதாக கூறி அவரை உடனே விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தனர். அதன்பின் மாணவியை விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் முழுமையாக விசாரணை நடத்தாமல் அவசரகதியில் மாணவியை அரசு காப்பகத்தில் தங்கவைத்த குழந்தைகள் நலக்குழு மற்றும் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செயல் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாணவனுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.