மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்ததாக கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி கடந்த 12-ம் தேதி இரவு 10 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாணவி இறந்த உடனே பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் மறுநாள் காலை தகவல் தெரிவித்தது எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் கழுத்தில் சில காயங்கள் இருக்கிறது.
அதன் பிறகு மாணவி மாடியில் இருந்து குதித்து அடிபட்டதற்கான எந்த ஒரு காயங்களும் உடம்பில் இல்லாதது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால் மாணவியின் பெற்றோர் என் மகள் எழுதாத கடிதத்தை பள்ளி நிர்வாகம் எழுதியுள்ளதாக கூறியுள்ளனர். என் மகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் தற்கொலை என கூறி அதை மூடி மறுப்பதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மாணவியின் உடலை பெற்றோர்கள் 2-வது நாளாக வாங்க மறுப்பதால் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.