மாணவி மர்மமான முறையில் இறந்த வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சாலூரில் இருக்கும் பள்ளி வளாகத்தில் கடந்த 15-ஆம் தேதி சிறுமி உடல் கருகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொடைக்கானல் மேல் மலையில் உள்ள கூக்கால் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், பள்ளிக்கு வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மாணவியின் இறப்பு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.