சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே பெரிய நெல்லூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி (16) என்ற மகள் இருக்கிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாயார் செல்வி மற்றும் உறவினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஊர்வலமாக சென்று வேப்பூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த உதவி மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது செல்வி தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், தன்னுடைய மகள் சாவு குறித்து தமிழக முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அப்போதுதான் உடலை வாங்கிக் கொள்வோம் எனவும் கூறினார். மேலும் ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உதவி மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததால் அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.