பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான கவிதை போட்டி திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செப்டம்பர் 9-தில் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது வழங்கப்படும். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஒன்றிய அளவில் கவிதை போட்டிகள் நடத்தி அதில் சிறந்த மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள் தேர்வு செய்யப்படும்.
அப்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி திங்கள்கிழமை வருவாய் மாவட்ட அளவில் கவிதைப் போட்டி நடத்தி அதில் சிறந்த ஒரு மாணவர், மாணவியை தேர்வு செய்து அந்த மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், பயிலும் பள்ளி, மாவட்டத்தின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவன் ஒரு மாணவி தொடர்பான விவரங்களை பள்ளி கல்வி ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு பாரதியார் நினைவு தினத்து அன்று இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.