மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் தேதி) நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து தற்போது திருப்பத்தூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே நாளை மொத்தம் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்திய நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.