வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையை கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் தற்போது புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆம்பூருக்கும் திருப்பத்தூருக்கும் இடையே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கிடப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயலின்போது தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றும் அரசு ஊழியர்களின் இடைவிடாத பணியால் மக்கள் காக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.