இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களளுடைய ஓய்வுக் காலத்தில் எவருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க தயாராக வேண்டும். உங்களின் குழந்தைகள் உங்களை காலத்தில் காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய கடைசி காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்வதற்கு பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை கண்டிப்பாக உதவியாக இருக்கும். இதற்காக எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல வகையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வரும் பல்வேறு பென்சன் திட்டங்களில் எல்ஐசி ஜீவன் அச்ஷய் திட்டமும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரேயொரு பிரீமியம் செலுத்தி, அதன்மூலம் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் மாதத்துக்கு ரூ.4,000 பென்சன் பெற முடியும். நீங்கள் இந்த பாலிசியை வாங்குவதற்குக் குறைந்தபட்சம் 30 வயதை அடைந்திருக்க வேண்டும். அதேபோல அதிகபட்சமாக 85 வயது வரை இந்த பாலிசியை வாங்கி கொள்ளலாம்.
இந்தியக் குடிமகன் எவராக இருந்தாலும் அவர்கள் இந்தப் பாலிசியை வாங்கிப் பயனடையலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இதில் கிடையாது. 59 வயது அடைந்த ஒருவர் இந்த பாலிசியை வாங்குவதாக இருந்தால் அவர் உத்திரவாதப் பணமாக 7 லட்சம் ரூபாய் பெறுவதாக இருந்தால், அவர் ஒரே ஒரு பிரீமியம் தொகையாக ரூ.7,12,600 செலுத்த வேண்டும்.
அப்படிச் செலுத்தினால் உடனடியாக அவர் பென்சன் பணத்தை வாங்க முடியும். அவருக்கு மாதத்துக்கு ரூ.4,337 என்ற அளவில் பென்சன் வந்துகொண்டே இருக்கும். அதேபோல, மாதா மாதம் பென்சன் தேவையில்லை என்றால் 3 மாதங்களுக்கு ஒரு முறையோ, 6 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 1 வருடத்துக்கு ஒரு முறையோ பென்சன் வாங்கிக் கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு ரூ.13,107, 6 மாதங்களுக்கு ரூ.26,513, ஒரு வருடத்துக்கு ரூ.54,145 என்ற அளவில் அவருக்குப் பென்சன் தொகை கிடைக்கும்.