விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் மாதவராவ். நுரையீரல் தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் மதுரை தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. மறைந்த மாதவராவ்தேர்தல் பரப்புரையின் போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் அவரது மகள் திவ்யா மாதவராவ்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்பிஏ முதுநிலை பட்டதாரியான மாதவராவ் 1986 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் மாநகர காங்கிரஸ் செயலாளர், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய மாணவர் அணி துணைத் தலைவர், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு கட்சி பதவிகளையும் வகித்துள்ளார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மாதவராவ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.