மாநாடு படத்தில் வில்லனுக்கு தனுஷ்கோடி என பெயர் வைத்ததற்கான காரணத்தை வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், மனோஜ், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மாநாடு படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு தனுஷ்கோடி என பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ‘ஒரு வலிமையான பெயர் வேண்டும் என்பதால் அந்த பெயரை தேர்வு செய்தோம். ரஜினி-கமல், அஜித்-விஜய் வரிசையில் சிம்பு என்றால் நினைவுக்கு வருவது தனுஷ் பெயர் தான். அந்த பெயர் வைத்தால் இயல்பாகவே ஒரு பவர் வந்துவிடும். அடிப்படையில் தனுஷ், சிம்பு இருவரும் நண்பர்கள் தான். இதற்காக தனுஷ் கண்டிப்பாக போன் செய்து சந்தோஷப்படுவார்’ என தெரிவித்துள்ளார்.