மாநிலங்களவையில் எம்பிக்களின் செயல்பாடு எல்லை மீறி விட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை முடங்கி வருகிறது. இரு அவைகளும் 16வது நாளாக முடங்கியுள்ளது. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையின் மாண்பை காக்க, எம்.பிக்கள் தவறிவிட்டதாகக் கண்ணீர் விட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு அவையில் எல்லை மீறியதாக அவர் வேதனை தெரிவித்தார். மாநிலங்களவையில் வெங்கைய நாயுடு கண்ணீருடன் பேசிய போதே எதிர்க்கட்சிகள் மீண்டும் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் மாநிலங்களவை நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.