புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒரே கூட்டணியில் உள்ள பாஜக, என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பாஜக கோரிக்கையை நிராகரித்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கட்சி அறிவுறுத்தலின் பேரில் லாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது மாநிலங்களவை எம்பி பதவியை பாஜாகவுக்கு ஒதுக்க கோரியதாக தெரிகிறது.
இதனை ஏற்க மறுத்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி டெல்லி பாஜக தலைமையில் பேசிக் கொள்வதாக கூறியதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இந்நிலையில் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மவுனமாக இருப்பதால் பாஜக உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து பாஜக மேலிடம் அவசர அழைப்பு காரணமாக பாஜக அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்று அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
அங்கு மாநிலங்களவை எம்பி பதவி விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாநிலங்களவை எம்பி பதவியை பெற பாஜக-தீவிரமாக உள்ளதால் அதற்கான முயற்சி டெல்லியில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.