மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தற்போது சாத்தியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, கட்டி முடித்த புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்து, சுமார் 22,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்பொழுது கூறினார். அப்பொழுது செய்தியாளர்கள் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், மக்களின் பொது நலன் கருதி அரசால், பல்வேறு தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து என்பது இப்பொழுது சாத்தியமில்லை என்றும் மக்கள் அரசு விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் இதற்கு முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பொழுது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் தொற்று பரவல் என்பது நாட்டில் குறைந்த அளவிலேயே உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் கூறியதிலிருந்து மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து என்பது தற்போது இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.