நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பரவியுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் ஒமிக்ரான் தொற்றாக இருக்குமோ என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. மேலும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி 399 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 7,255 பேர் கொண்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். ஏனென்றால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவல் அதிகரிப்பதன் அடிப்படையில் ஊரடங்கு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.