இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் ஒமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. தற்போது பல மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம்,டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்ததப்பட்டாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி டெல்லியிலுள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு உள்ள 3 மாநகராட்சிகளில் ஒரு நாளைக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சந்தை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து கடைகளுக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒற்றைப்படை எண் கொண்டுள்ள கடைகள் ஒருநாளும் மற்றும் இரட்டைப்படை எண் கொண்டுள்ள கடைகள் ஒருநாளும் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.