இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் தற்போது கல்வி நிலையங்களை மூடும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பள்ளிகள் திறந்தே தான் இருக்கும். ஆனால் 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் பள்ளிகள் மூடப்படும். அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஓரிரு நாட்களில் நிலைமை ஆராய்ந்த பின்னர், மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும். அப்போது தேவைப்பட்டால் பள்ளிகளை மூட வாய்ப்புள்ளது. மேலும் வரும் நாட்களில் நிலைமைக்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவுகள் எடுக்கப்படும். மேலும் ஒட்டுமொத்த மாநிலத்திலும் கோவிட் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.