இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு ஏற்கனவே இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சேனல்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட இருக்கிறது. இதனால் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் அரசு சார்பில் இயக்கப்படும் சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது இந்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்ட அமைச்சகத்தின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் ஒளிபரப்பாகும் கல்வி சேனல், அரசு கேபிள் டிவி, ஆந்திராவில் செயல்படும் ஐபிடிவி போன்றவைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்று கூறப்படுகிறது.