பீகார் மாநில அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதாரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செய்தி வெளியாக இருக்கிறது. அதாவது அகவிலைப்படி தொகை 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் நிதீஷ் தலைமையிலான பீகார் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ஜனவரி 1 2022 முதல் இயற்றப்பட்ட DA கொடுப்பனவின் பலனை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்களின் டிஏ, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாறி இருக்கிறது. இதற்கு முன்னதாக பீகார் மாநில அமைச்சரவையில் DA உயர்வுக்காக நிதியமைச்சகம் முன்மொழிந்திருந்த நிலையில் அதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவால் மாநில அரசிற்கு ரூபாய் 1,133 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.இதனுடன், பீகார் தற்செயல் நிதியின் வரம்பு மார்ச் 30 வரை தற்காலிகமாக 350 கோடியிலிருந்து 9500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தானியக் கொள்முதல் பணிகளில் மானியத் தொகை அதிகரித்தால், அதை மீண்டும் அமைச்சரவைக்கு அனுப்பாமல், ஒப்புதல் அளிக்கத் துறைக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது தவிர பீகார் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிற்சாலைகளுக்கு நியாயமான விலையில் நிலக்கரி வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஏஜென்சிக்கு 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், 43 கோடியில் தீயணைப்பு வாகனங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, மும்பையில் உள்ள முதலீட்டு ஆணையர் அலுவலகத்திற்கும், 2022-23 நிதியாண்டில் மூன்று கோடியே 23 லட்சம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கலால் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.