இமாச்சல பிரதேச அரசு தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் இமாச்சல பிரதேச மாநில அரசும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநில நிறுவன தின விழாவில் அம்மாநில முதல்வர் ஜெயராம் தாக்கூர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,” இமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கு தற்போது 28 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மூன்று சதவீதம் உயர்த்தி 31 சதவீதமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதோடு தற்போது ஓய்வூதியம் பெற மாத வருமானம் 35 ஆயிரமாக இருந்து வந்ததை 50 ஆயிரமாக உயர்த்தி உள்ளோம். அதோடு 2015ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள்கள் மற்ற ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறுவார்கள் எனவும் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு அவர் கூறினார்.