இருசக்கர வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சம்பட்டி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் இருக்கிறது. இவர் விடுமுறையை முன்னிட்டு பச்சம்பட்டிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார். இவர் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சாலையில் மேய்ந்து கொண்டிருந்த மான் ஒன்று சாலையை கடக்க முயற்சித்த போது தமிழ்ச்செல்வனின் இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் மான் இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. அதன் பிறகு விபத்தில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு தமிழ்ச்செல்வனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது தொடர்பாக சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த மானை வனத்துறையினர் மீட்டு அடக்கம் செய்தனர்.