டெல்லியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 41 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகளின் 41 சங்ககளின் பிரதிநிதிகளுடன் இதுவரை ஏழு கட்ட பேச்சு வார்த்தைகளை மத்திய அரசு நடத்தியுள்ளது. இதனையடுத்து எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் உடன்பாடு எட்டாவிட்டால் டெல்லி மாநகருக்குள் நுழையும், குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். அதனால் அரசு விரைந்து இதற்கு தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.