பாஜக கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையான் புதூர் பகுதியில் பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் அண்ணாமலை நடந்து சென்ற போது பொதுமக்கள் அவருக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அண்ணாமலை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கொரோனாவை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை தயாரிக்க முடியாது என சிலர் கூறினாலும், பிரதமர் மோடி சாதித்து காட்டியுள்ளார். தமிழக மக்கள் குடிசை வீட்டில் வாழ வேண்டும். அதில் முதல்வர் குனிந்து சென்று போட்டோ எடுத்து பப்ளிசிட்டி தேடிகொள்ள வேண்டும். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
ஆனால் நம் பிரதமர் மோடியால் மத்திய அரசு தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு 15 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. கடந்த 67 வருடங்களில் 5 கோடி 50 லட்சம் கழிப்பிடங்கள் தான் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து வருடங்களில் 11 கோடி கழிப்பிடங்களை கட்டியுள்ளார். நம்முடைய பிரதமர் மேக் இன் இந்தியா பாதையில் செல்கிறார். திமுக கட்சியோ பிரேக் இன் இந்தியா பாதையில் செல்கின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் முதல்வரை வைத்துக்கொண்டே தனி மாநிலம் பற்றி ஒருவர் பேசினார். ஆனால் பிரதமர் ஐநா சபைக்கு சென்றாலும் கூட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழில் தான் பேசுகிறார். திருப்பூர் மாவட்டத்திற்கு மத்திய அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போது தமிழக அரசு அந்தத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. வருகிற 2024 ஆம் ஆண்டுக்குள் இஎஸ்ஐ மருத்துவமனையானது கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
இங்கு பஞ்சு அதிக விலைக்கு விற்பனை செய்த போது உடனடியாக மத்திய அமைச்சரை திருப்பூருக்கு வரவழைத்து உடனடி தீர்வு காணப்பட்டது. அதேபோன்று கறிக்கோழி பிரச்சனையில் இருக்கும் பிரச்சனைகளை 15 நாட்களுக்குள் தமிழக அரசு தீர்வு காணாவிட்டால் பாஜக அரசு களத்தில் இயங்கவும் தயங்காது. அதன் பிறகு ரஷ்யா-உக்ரைன் போரின்போது உக்கரைன் நாட்டில் படித்த மருத்துவ மாணவ-மாணவிகளை இந்தியாவிற்கு பிரதமர் மோடி அழைத்து வந்த போதும், திமுக அரசு தான்தான் செய்தது போன்று பெருமிதம் கொள்கிறது. இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்திற்கு வருவதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் தீராத முயற்சி என்ற போதிலும், தமிழக முதல்வர் விளம்பர படத்தில் நடித்துக் கொண்டு மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்பது போல் நடந்து கொள்கிறார்.
இதனையடுத்து அமைச்சர் ராமச்சந்திரனிடம் ஒரு பெண் வீடு கட்டி தறுமாறு கேட்டபோது அமைச்சர் அந்த பெண்மணியை அடித்தார். இது தொடர்பாக பாஜக கேட்டபோது செல்லமாக தட்டியதாக திமுகவினர் கூறினர். இப்படி செல்லமாக மக்களை அடிக்கும் பழக்கம் தான் திராவிட மாடலா? பல்கலைக்கழக விடைத்தாளில் கீழ் சாதி எது என கேட்பதுதான் திராவிட மாடலா? தற்போது கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய வன்முறையாக மாறியதை பற்றி கவலைப்படாத, தமிழக முதல்வர் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர படத்தில் நடிப்பதற்காக மாப்பிள்ளை போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார். நம்முடைய டிஜிபியோ சைக்கிள் ஓட்டுகிறார். அதோடு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாத அமைச்சர்களுக்கு, திமுக பட்டத்து இளவரசருக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
மேலும் வருகிற 2024-ம் ஆண்டு பாஜக அரசு பெரும்பான்மையான அமைச்சர்களுடன் ஆட்சியில் அமர்ந்தால்தான் ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளை மிரட்டலாம். தற்போது உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை உற்று நோக்குகிறது. அது மட்டுமா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் வந்து குண்டு வைக்க வேண்டும் என்றால், தற்போது அந்த நாடே இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் மத்தியில் ஆளும் பாஜக அரசு தான். வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடியை வைக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை கூறி தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார்.