தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் போடூர் காட்டுகொல்லை பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி(25) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிக்கும், அவரது தாய்மாமாவான அன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து குடும்ப பிரச்சனை காரணமாக திருமணமான 1 1/2 ஆண்டுகளிலேயே ஜோதி தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதியை சாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதியினருக்கு 9 மாத அமிழ்தரசன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜோதியின் முதல் கணவர் அன்புவின் தந்தை மாணிக்கம் கடந்த 11-ஆம் தேதி உயிரிழந்தார்.
அதற்கான இறுதி சடங்குக்கு அழைத்து செல்லுமாறு ஜோதி தனது 2-வது கணவரிடம் தெரிவித்தார். அங்கு சென்றால் ஏதாவது பிரச்சனை ஏற்படும். எனவே அங்கு செல்லக்கூடாது என சாமிநாதன் கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.