திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சொந்த மாமாவிடம் 10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய இளைஞர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூர் மூக்க கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹஸைன் என்பவர் வெங்காயம் இறக்குமதி செய்து மொத்த விற்பனை செய்து வருகிறார். மேலும் இவரது சகோதரி மகனான ஹமீத் என்பவரும் மாமாவுடன் இணைந்து வெங்காயம் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் ஹஸைனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ஹமீதை கடத்தியதாகவும், பத்து லட்சம் ரூபாய் தராவிட்டால் அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த ஹஸைன் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் மிரட்டல் விடுத்த நபர் கூறிய இடத்திற்கு சென்று பணத்தை வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார் துப்பாக்கி முனையில் கடத்தல் கும்பலை கைது செய்தனர்.
விசாரணையில் ஹமீதே எனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்திற்காக கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது அம்பலமானது. இதனையடுத்து ஹமீதின் நண்பர்களான முகமது சுபிக், பயாஸ், ஹபித், அப்ரத் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். சொந்த மாமாவிடம் மருமகனே கடத்தல் நாடகம் நடத்தி பணம் பறிக்க நினைத்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.