மருமகள் மாமியாரை அடித்து கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் எல்லப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தைலம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அதே பகுதியில் மூதாட்டியின் கடைசி மகனான மெய்வேல் என்பவர் அவரது மனைவி செல்வியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டிக்கும், செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று காலை இருவருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வி கட்டையால் தனது மாமியாரை சரமாரியாக அடித்தார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மெய்வேல் மூதாட்டியை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு மூதாட்டியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே போலீசுக்கு பயந்து செல்வி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்வி மற்றும் தைலம்மாளின் உடல்களை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.