குடும்பத்தகராறு காரணமாக மூன்றுபேரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கண்ணன் (30) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழில் செய்து வரும் இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் மகள் மலர்கொடி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் மஞ்சுளா குடும்பத்தினருக்கும், கண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன், மஞ்சுளா வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இரவில் கண்ணனுக்கும், மஞ்சுளா குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் கண்ணன் அவர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு, தான் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பாப்பாத்தி என்பவரின் வீட்டு தோட்டத்தில் தூக்கிப்போட்டுவிட்டு வெளியே சென்று விட்டார்.
இது குறித்து மஞ்சுளாவின் உறவினரான வரதனின் மகன் பிரபாகரன்(21) மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த் நிலையில் வெளியே சென்ற கண்ணன், திரும்பி வந்ததும் தான் துப்பாக்கி வைத்திருந்ததை எப்படி போலீசுக்கு தகவல் கொடுக்கலாம்? என்று கேட்டு மீண்டும் மஞ்சுளாவின் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வரதன்(50), முத்துசாமி(23), விஜயசங்கர்(21) ஆகிய 3 பேரையும் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு, தப்பித்துச் சென்ற கண்ணனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயமடைந்த வரதன், முத்துசாமி, விஜயசங்கர் ஆகிய மூவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.