மருமகள் தனது நண்பரின் மூலம் மாமியாரின் தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் லலிதா என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் லலிதா தனியாக இருந்த போது வாலிபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் புகுந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து லலிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் கார்த்திகேயன் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது லலிதாவின் மருமகளான மோகனசுந்தரி என்பவருக்கு இந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருந்துள்ளது.
அதன்பின் மோகனசுந்தரியை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அவர் காவல்துறையினரிடம் கூறியதாவது, எனது தங்கையின் மருத்துவ செலவிற்கு தேவைப்பட்ட பணத்தை லலிதா அவரது தங்க நகையை அடகு வைத்து பணம் தந்து உதவினார். அதன்பிறகு தங்க நகையை மீட்டு தரக்கோரி எனது மாமியார் அடிக்கடி என்னை தொந்தரவு செய்ததால் அதனை மீட்டு கொடுத்தேன். இதனையடுத்து அந்த தங்க நகையை அபகரிக்க நினைத்து எனது பள்ளி நண்பரான கார்த்திகேயன் என்பவரை வீட்டிற்குள் அனுப்பி நகையை பறித்ததாக மோகன சுந்தரி கூறியுள்ளார். அதன்பின் காவல்துறையினர் மோகனசுந்தரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.