புதுச்சேரியில் உள்ள திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பகுதியில் ஓட்டுனராக பணிபுரியும் ஆனந்த் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சேர்ந்த நர்சாக பணிபுரிந்த சந்தியா (24) என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு ஆனந்த் தன்னுடைய தாயார் அன்னக்கிளி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அன்னக்கிளி மற்றும் சந்தியாவுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் 2 பேரையும் ஆனந்த் சமாதானம் செய்து வந்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக மிகவும் மன வருத்தத்தில் இருந்த சந்தியா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை எழுந்த போது ஆனந்த் தன்னுடைய மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து ஆனந்தும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கதவை உடைத்து ஆனந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதற்கிடையில் மருமகள் இறந்ததாலும், மகனும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாலும், மனமுடைந்த அன்னக்கிளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து திருபுவனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.