பேருந்தில் இருந்து தவறி விழுந்து இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை பகுதியில் ஜியாஉல்ஹக்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற ஜியாஉல்ஹக் அங்கிருந்து பி.துரிஞ்சிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தர்மபுரியில் இருந்து பொம்மிடி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து செம்மணஅள்ளி அருகே சென்ற போது வளைவில் திரும்பியது.
அப்போது முன்பக்க படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஜியாஉல்ஹக்கை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.