இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேவிளை கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலாவிற்கு சிதம்பரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சேவிளையில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிதம்பரம் தனது மனைவியுடன் வந்துள்ளார். இதனை அடுத்து சிதம்பரம் தனது மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சரஸ்வதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது தனது மகள் தீயில் கருகி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு அருகில் மண்ணெண்ணெய் கேன் கிடந்ததால் நிர்மலா தீக்குளித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிர்மலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.