கழுத்து இறுக்கப்பட்டு தாய் மற்றும் பிள்ளைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்து நாட்டில் பாலிண்டீர் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு இந்திய குடும்பத்தினரை சில நாட்களாக வெளியே காணவில்லை என்பதால் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கதவின் வழியாக தண்ணீர் பெருகி வாசலுக்கு வெளியே வந்து கொண்டிருந்திருக்கிறது.
இதனையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்ததில் அங்கு சீமா பானு(36) என்ற இளம்பெண் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு இறந்து கிடப்பதை கண்டுள்ளனர். அருகில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு சீமாவின் மகள் மற்றும் மகன் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்ததால் அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. காவல்துறையினர் அந்த வீட்டிற்கு செல்லும்போது சீமாவின் கணவர் சமீர் சையத் அங்கு இல்லை.
சீமாவும் அவரது குழந்தைகளும் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் சந்தேகிக்கின்ற நிலையில், அவர்களின் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழுமையான காரணங்கள் தெரியும். இது தற்கொலையா அல்லது கொலையா என எந்த முடிவும் எடுக்க முடியாதபடி மூன்று பேரின் மரணம் மர்மமாகவே இருக்கிறது. எனவே போலீசார் இதற்கான காரணத்தை தற்போது விவரிக்க இயலாது என்று கூறியுள்ளனர்.