பதினைந்து வருடங்களுக்கு முன்பு காணாமல் போன காவல் அதிகாரி பிச்சைக்காரராக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டேட்டியா காவல் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர் மணிஷ் மிஸ்ரா. 2005ஆம் வருடம் திடீரென காணாமல் போன இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து சில நாட்களுக்கு முன்பு மன நலம் சரியில்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மணிஷ் மிஸ்ராவை அவருடன் பணிபுரிந்த சக நண்பர்கள் ரத்னேஷ், விஜய் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருவரும் சென்ற சமயம் சாலையில் பிச்சை எடுப்பவர் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவருக்கு உதவுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அவரிடம் ரத்னேஷ் மற்றும் விஜய் பேச்சு கொடுத்தனர். அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது தாங்கள் உதவி செய்ய சென்றது பிச்சைக்காரருக்கு அல்ல தங்கள் உடன் பணிபுரிந்த மணிஷ் மிஸ்ராவுக்கு என்பது.
இதனை தொடர்ந்து அவரை தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் மனநிலை சரியில்லாத காரணத்தினால் மணிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அங்கிருந்த சமூக நல அமைப்பின் மணிஷ் மிஸ்ராவை சேர்த்த சக காவலர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மணிஸின் குடும்பத்தினர் காவல்துறையில் பணியாற்றி வரும் நிலையில் அவரது மனைவி நீதித்துறையில் பணி புரிகிறார்.