புகார் அளித்த 3 மணி நேரத்திலேயே மாயமான சிறுவன் மற்றும் சிறுமியை மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி அதே பகுதியில் 9 வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென இருவரும் திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளனர். இதனை அறிந்த இருவரது பெற்றோர்கள் உடனடியாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமை காவலர் முருகன் பெண் காவலர் முருகேஸ்வரி மற்றும் ஜோதி என தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அந்த விசாரணையில் மாயமான சிறுவன் மற்றும் சிறுமி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு அவர்களது பெற்றோரிடம் பாத்திரமாக ஒப்படைத்துள்ளனர். மேலும் புகார் அளித்த 3 மணி நேரத்திலேயே மாயமானவர்களை மீட்ட தனி படையினருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.