Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாயமான வடமாநில தொழிலாளர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 9 பேர் கைது…!!

ரிக் வண்டி அலுவலகத்தில் நுழைந்து பணத்தை திருடிய 9 வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள சிங்களங்கோம்பை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி கைகாட்டியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 9 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அந்த 9 பேரும் அலுவலகம் அருகிலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி ராஜேஷ் வழக்கம் போல அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு உள்ளே இருந்த 3,80,000 ரூபாய் திருடு போயிருந்தது.

அதேநேரத்தில் வடமாநில தொழிலாளர்களான துளசிநாத், நாதாலாந்தீம், சேசன்தர்வோ, விமல் யாதவ், தோவானாந்த், லட்சுமண சின்னா, சஞ்சய் குமார், ஜீதகமார் சூரி ஆகிய 9 வாலிபர்களும் திடீரென மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் உடனடியாக எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

அப்போது அந்த 9 வடமாநில இளைஞர்களும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த 9 வடமாநில இளைஞர்களும் திட்டம்போட்டு அலுவலகத்தில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் 9 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 3,80,000 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |