உத்தரப்பிரதேச மாநிலம் அரசியலில் மாயாவதியின் அத்தியாயம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் இனி அவரால் தலையெடுக்க முடியும் என்று தோன்றவில்லை. இந்நிலையில் 80 களில் காங்கிரஸுக்குக் கை கொடுத்த ஜாதி பார்முலா வைக் கையில் எடுக்கலாமா என்ற திட்டத்தில் ராகுல் காந்தி இருக்கிறாராம். உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாக தோல்வி அடைந்தது. சென்ற 2017 சட்டசபைத் தேர்தலைவிடவும் இம்முறை காங்கிரஸின் நிலைமை மோசமாகிவிட்டது. இதனையடுத்து காங்கிரஸை எப்படி தேற்றுவது என யோசனையில் கட்சி மேலிடம் இருக்கிறது. இதனிடையே ராகுல் காந்தி மனதில் ஒருதிட்டம் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். என்னவென்றால் உத்தரப்பிரதேச தலித் வாக்குகளை மொத்தமாக கவரும் யோசனையில் ராகுல் காந்தி உள்ளாராம். இது தவிர மாயாவதியைப் போன்றே பிராமணர் சமூக வாக்குகளையும் காங்கிரஸ் பக்கம் திருப்பும் திட்டமும் ராகுல் காந்தியிடம் இருக்கிறதாம்.
அதாவது தலித்-பிராமணர் -முஸ்லீம் இந்த முத்தரப்பு வாக்கு வங்கியை மீண்டும் கட்டியெழுப்ப ராகுல் காந்தி திட்டமிட்டு இருக்கிறாராம். இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி கூறியதாவது, உ.பி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியையும் சேர்க்க திட்டமிட்டு இருந்தோம். இது குறித்து அவர்களையும் தொடர்பு கொண்டிருந்தோம். எனினும் மாயாவதியிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. மாயாவதி இத்தேர்தலை முறையாக சந்திக்கவில்லை என்பதோடு அவர் எங்களுக்குப் பதிலளிக்கவும் மறுத்து விட்டார். உத்தரப்பிரதேச தலித்மக்களுக்காக கன்ஷிராம் குரல் கொடுத்து கடைசி வரை போராடியது காங்கிரஸைப் பாதித்தது என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. இருந்தாலும் அவர் போல மாயாவதி போராடவில்லை, போட்டியிடவில்லை. அவரைச்சுற்றி சிபிஐ, அமலாக்கப் பிரிவு, பெகாசஸ் என்ற அபாயங்கள் உள்ளதையும் நாங்கள் மறக்கவில்லை என ராகுல் காந்தி கூறினார். உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விடவும் மோசமான தோல்வியைச் பகுஜன் சமாஜ் கட்சி சந்தித்தது.
ஒருசீட்டில் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. மாயாவதியின் வாக்குவங்கி சிதறிப்போய் விட்டதையே இது காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதைவிட முக்கியமாக உருவாக்கப்பட்டதன் நோக்கத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி வெகுவாக விலகிப்போய் விட்டதையும் வாக்காளர்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த பின்னணியில் தான் மாயாவதியை நம்பியிருந்த தலித்வாக்கு வங்கியை தனது பக்கம் திருப்ப ராகுல் காந்தி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் கூடவே பிராமணர்கள், முஸ்லீம்களையும் இணைத்து 80-களில் செய்த அதே மாஜிக்கை மீண்டும் நிகழ்த்தவும் ராகுல் காந்தி விரும்புகிறாராம். மேலும் தலித்துகளைக் கவரும் அடிப்படையிலும் இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். ஜாதி கொடூரங்கள் நாட்டைவிட்டு அழிய வேண்டும் என தலித் மக்களைக் குறி வைத்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சராக 4 முறை மாயாவதி இருந்துள்ளார். ஆனால் இத்தேர்தலில் அனைவரும் ஆச்சரியப்படும் அடிப்படையில் கடைசிவரை மாயாவதி ஆக்டிவாகவே இல்லை. அவர் ஏதாவது செய்வார் என தலித் வாக்காளர்கள் நம்பியிருந்து ஏமாந்ததுதான் மிச்சம். மேலும் பாஜகவின் மறைமுக அழுத்தமே மாயாவதியின் மெளனத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. உ.பி. அரசியலில் இருந்து மாயாவதி கிட்டத்தட்டவெளியேற்றப்பட்டு விட்டார். அவரை நம்பி இருந்த தலித் வாக்குவங்கியைக் கவரும் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த வாக்கு வங்கியை தனது பக்கம் திருப்பினால் நிச்சயம் காங்கிரஸுக்கு பெரும் வளர்ச்சி உண்டாகும் என அதன் தலைவர்கள் நம்புகிறார்கள். ஆகவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், ராகுல் திட்டம் வெல்லுமா என்பதை.