உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஷாலிமார் கார்டன் பகுதியில் உடற் பயிற்சிகூடம் (ஜிம்) ஒன்று இருக்கிறது. இதன் உரிமையாளராக அடில் (33) என்பவர் இருந்தார். இவர் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சிகளை கற்றுதரும் பயிற்றுனராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜிம்முக்கு தொடர்ந்து சென்றுவந்துள்ளார். அத்துடன் அவரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொள்வது வழக்கம் ஆகும்.
அண்மையில் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கி, அதற்குரிய அலுவலகம் ஒன்றையும் ஷாலிமார் கார்டன் பகுதியில் அவர் திறந்துள்ளார். அந்த அலுவலகத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில், தன் இருக்கைக்கு வந்த அவர் மேலே அணிந்த பனியனை கழற்றி போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் சோர்வாக காணப்பட்ட அவருக்கு மற்றொரு நபர் வியர்வையை துடைத்துவிட்டு இருக்கிறார்.
அதனை தொடர்ந்து சற்றுநேரம் நாற்காலியில் அமர்ந்திருந்த அடிலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அப்படியே சரிந்துள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த உடனிருந்தவர்கள் அவரை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். எனினும் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். அவருக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.