மார்ச் 1-ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அமைச்சுப்பணி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நம்பர் 1 டோல்கேட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியிலிருந்து 2% பட்டதாரி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தகுதி படைத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த சங்கத்திற்கு மாநிலத் தலைவர் காந்தி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு அரசாணை எண் 175 நாள் 19.07.2007 படி 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் பின்னடைவு பணியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசிற்கு வலியுறுத்தப்பட்டது .
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் மறைந்த, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களது ஆட்சி காலத்தில் அரசாணை எண் 175 கடந்த 2007ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசாணையின் படி பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் 2011ம் ஆண்டு முதல் இந்த அரசாணை செயல்படுத்தப்படாமல் வைத்துள்ளனர்.
இதனால் அரசாணை எண் 175 நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் மாதம் 1ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதனால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் போராட்டம் நடத்தப்படும். மேலும் உடனடியாக தமிழக அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், மதுரை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 50 பெண்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட அமைச்சு பணியாளர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.