அரசு மினி கிளினிக் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .
கடலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு மினி கிளினிக் மருத்துவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் நாங்கள் அரசு மினி கிளினிக்கில் மருத்துவர்களாக அனுமதிக்கப்பட்டோம். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுதல், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், தடுப்பூசி போடும் பணி போன்றவற்றில் ஈடுபட்டு வந்தோம்.
இதற்கான சம்பளம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து எங்களுக்கு வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வருகிற மார்ச் 31-ஆம் தேதி முதல் எங்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இதனால் எங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். எனவே அரசு மினி கிளினிக் மருத்துவர்கள் பணியை நீட்டிப்பு செய்ய வேண்டுமெனவும், சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக தரவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.