தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி நேற்று கைது செய்தனர். இதனையடுத்து போலீசாரை கண்டித்து செம்பட்டி பஸ் நிலைய அருகில் ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சார்பில் மறியல் நடந்தது. இதற்கு மாற்றுத்திறனாக நல சங்கம் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கினார். இது குறித்து தகவல் அறிந்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதனை போல பழனியில் மயில் ரவுண்டான அருகில் மாற்றுத்திறனாளி சாலை மறியல் ஈடுபட்டனர். இதற்கு சங்கம் மாவட்ட செயலாளர் நூருல்ஹீதா தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தின் போது தர்மபுரியில் போராடிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்ததை கண்டித்து கோஷமிட்டனர். இவர்களிடம் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கென சங்க சார்பில் கொடை ரோட்டில் மறியல் நடந்தது. இதற்கு நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். தர்மபுரி குண்டுகட்டாக தூக்கி, மாற்று திறனாளிகளை கைது செய்த போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அம்மைநாயக்கனூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். மேலும் சாணார்பட்டியில் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.