தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். கடந்த பல வருடங்களாக அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடி வருகின்றனர். இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று மாற்றுத்திறனாளிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது .
எனவே மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் நீண்ட நாட்களாக முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது போல உதவித்தொகையை தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.