Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கை… தமிழக அரசின் அசத்தல் சாதனை…!!!

 இந்தியாவிலேயே முதன்முறையாக சமவாய்ப்பு கொள்கையினை தமிழகத்தில்  நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மாற்றுத்திறனாளி நல இயக்குநர், மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கை குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் டிசம்பர் 2021 முதல் முதற்கட்டமாக தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன், நடத்திய சமவாய்ப்பு கொள்கை விழிப்புணர்வு கூட்டங்களின் மூலம் 3165 நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கையினை வெளியிட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த இடங்களாக 1299 பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இப்பணியிடங்களை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் நிரப்பிடும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையம் (Differently Abled Employment and Livelihood Center) – DELC என்ற அமைப்பின் மூலம் மாநில அளவிலும், 6 மண்டலங்களின் அளவிலும் (சென்னை,கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி,திருவண்ணாமலை) DELC செயல்படுத்திட திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்த சமவாய்ப்பு கொள்கையில் மாற்றுத்திறனாளிகளால் செய்யக்கூடிய பணிகளாக கண்டறியப்பட்ட பணிகள் குறித்த விவரம், இப்பணியிடங்களை நிரப்பிடும் விதிமுறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளற்ற சூழ்நிலைகளை உருவாக்கக்கூடிய வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள தொடர்பு அலுவலர் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் கூறியுள்ளதாவது, மாற்றுத்திறனாளிகள் நலன்கள், உரிமைகள் மற்றும் அவர்களது முன்னேற்றத்தில், தமிழகமானது இந்தியாவிலேயே முதன்முறையாக சமவாய்ப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இப்பணிகளை துரிதப்படுத்திட மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 2021 முதல், தனியார் நிறுவனங்கள், கம்பெனிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 14 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.மேலும்  தனியார் வேலை வாய்ப்பு முகாம்களில் DELCன் பங்கேற்புடன் 533 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு கோரும் 1935 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |