உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது.
அந்த வகையில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவரால் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மேலும் விருது பெற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவித்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் “நான் முதல்வன் திட்டத்தின்” மூலமாக 500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கிy புகழ்பெற்ற கணினி நிறுவனமான “காக்னிசன்ட் டெக்னாலஜி” நிறுவனத்தின் மூலமாக ஒரு வழிகாட்டியை அமர்த்தி இந்திய முன்பொருள் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்க்காம் மூலமாக மென்பொருள் திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பினை பெற்று தருகிறது. மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் போன்ற 6 புதிய மாவட்டங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து உதவி உபகரணங்களை வழங்கியுள்ளார்.