Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கு புதிய வீடு…. தொண்டு உள்ளங்களின் உதவியோடு… அசத்திய உதவி ஆட்சியர்…!!

குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு 90 உள்ளங்கள் இணைந்து புதிதாய் வீடு கட்டிக் கொடுத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். பார்வை மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டு வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். கண்பார்வை குன்றிய நிலையிலும் தன்னை பெற்ற தாயை காப்பாற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று குழந்தைகள் விளையாடும் சோப்புத் தண்ணீர் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் பொது முடக்கத்தினால்  அவரது வாழ்க்கை கேள்விக் குறியானது. இதனிடையே மழை பெய்யும் காலங்களில் அவரது ஓட்டு வீடு ஒழுகி பெரும் இன்னலை சந்தித்தார். இது பற்றி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இதனால் அவர்களின் நிலை உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரனின் கவனத்திற்கு சென்றது. அதனை தொடர்ந்து தொண்டு உள்ளங்களை ஒன்றாக இணைத்து புதிதாக வீடு கட்டும் பணியில் சிவகுரு பிரபாகரன் அவர்கள் ஈடுபட்டார். தொண்டு உள்ளங்கள் அளித்த பொருளாதார உதவி, குறைவான சம்பளம் பெற்று தரமான பணியைச் செய்த கொத்தனார், தச்சர் என பலரது பங்களிப்புடன் வீடு 25 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட வீடு மாற்றுத்திறனாளிக்கு மட்டுமல்லாது அவரது வீட்டின் அருகே இருந்த மற்றொரு ஏழைப்பெண்ணிருக்கும் சேர்த்து இரண்டு வீடுகள் கட்டி இரண்டு குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

3 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு வீடுகளும் உதவி ஆட்சியர் மற்றும் நல் உள்ளத்தோடு உதவி புரிந்த பலருடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி இரண்டு  குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு மேலும் சில வீடுகள் இடியும் நிலையில் இருப்பதாகவும் அதனைப் புதுப்பித்து தர உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  உதவி ஆட்சியர் அவர்களிடம் பரிசீலித்து முடிவு கூறுவதாக உறுதி அளித்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது.

Categories

Tech |