தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கடந்த மே 16-ம் தேதி உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி பெறுவதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஆழ்வார்பேட்டை, எத்திராஜ் மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பிறகு மருத்துவக் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.