கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி அதிபர் மற்றும் பிரதமரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார்.
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காதி நகரத்தில் அமைந்துள்ள ராணுவத் தளம் அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே சென்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வந்துள்ளன. அது ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பதற்கான சதியாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதனால் இராணுவ வீரர்களிடம் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் உருவானதற்கு காரணமாக யார் இருக்கிறார்கள் என்று உடனடியாக தெரியவில்லை. மேலும் மாலி நாட்டின் மந்திரிகள் மற்றும் சில இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் புரட்சியாளர்கள் மாலியில் ராணுவ ஆட்சியை பிடித்து உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி அதிபர் மற்றும் பிரதமரை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ நா சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளார்.