நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பலரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் சரிந்து, விற்பனை முடங்கியுள்ளது. இதனை மீட்டெடுப்பதற்கு வணிக வளாகங்களை திறக்க வேண்டும் என்று இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அரியானா மாநிலத்தில் கட்டுப்பாடுகளுடன் வணிக வளாகங்கள் திறந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டி சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன், இப்படி செய்வதால் ஊழியர்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும் என்று கூறியுள்ளார்.