இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிப்பொருள் இல்லாத சூழல் போன்றவற்றை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. அதன்படி இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தது.
நேற்று முதலே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் பெரும்பாலான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக்காண முடிந்தது. இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் விதமாக காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி வருகின்றனர். இதில் பெரும்பாலானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மாளிகையிலிருந்து கோத்தபயராஜபக்சே தப்பி ஒடியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மிகப் பெரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களில் நடந்து வரும் சூழ்நிலையில், கோத்தபய ராஜபக்ச பத்தரமுல்லையிலுள்ள ராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை பல்கலைக்கழகங்கள் மாணவர் பேரவை தெரிவித்து உள்ளது.