44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக சேலம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சேலம் அழகாபுரம் புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ போன்ற தொடங்கி வைத்துள்ளனர். இது பற்றி கலெக்டர் கார்மேகம் பேசியபோது, சர்வதேச அளவிலான 44வது ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறுகிறது.
இதில் 187 நாடுகளை சேர்ந்த 2,000ற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக வட்டார அளவிலான செஸ் போட்டி ஏற்கனவே கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் முதல் இரண்டு இடங்களை பெறக்கூடிய ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் 5 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றார்கள்.
மேலும் முதல் இரண்டு இடங்களை பெறும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முருகன், புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சகாயராஜ் செயலாளர் அருளப்பன் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.