மத்திய நுகர்வோர் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பான வழிமுறைகள் அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டால் உரிய விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் சேவை கட்டணம் வசூலிப்பது நுகர்வோர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், விதிமுறைகளை மீறுவதாகவும், முறையற்ற வணிக விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் கருதப்படும். இந்நிலையில் சேவை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வரை 537 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய நுகர்வோர் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகு 85 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் காசியாபாத், புனே, மும்பை, பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய இடங்கள் உள்ளது.