தமிழகத்தில் இருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாட வேண்டும். முக்கியமாக இசை தட்டுகள் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாட வேண்டும். அப்போது தவறாமல் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பூஜிய குறைபாடு, பூஜிய விளைவு குறித்த கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. அப்போது மாவட்ட ஆட்சியர் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் அதிகாரிகள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட முன்வரவில்லை. இதனால் அங்கிருந்து அதிகாரி ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை செல்போன் மூலமாக மைக்கில் ஒலிபரப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.